சக்கரம்
ஐம்பூதத்து இயற்கையில் இடையறாத ஓர் பன்னிலை பன்முக நிகழ்தல் இருந்துகொண்டுள்ளது. அதனோடு உடனாக இயைந்து முறைபிறழாமல் நிற்கும் ஆணை அல்லது ஆணைச் சக்கரம் ஒன்றுள்ளது. அஃது 1. இயற்கையாணை 2. இறையாணை 3. பெருந்தமிழாணை என மூன்று நிலையுடையது.
தமிழ்கூறு நல்லுலகம் மூன்றையும் ஒருநிலையாகக் கொண்டுணர்ந்து; மூலப் பெருந்தமிழ் மரபுநெறி என அவற்றை அறிவறிந்து வடிவமைத்துக் கொண்டது. அஃது என்றுமுள்ள தொல்லாணை நல்லாசிரியர் மரபுவழி இயங்கும் ஒழுக்கமுடையது.
ஞாயிறு – திங்கள் – தீ
இவை இயற்கை முழுவதிலும் மாந்தர் உடம்பிலும் அகத்திலும் புறத்திலும் ஒளியியக்க நிலைகளாய் – ஒளிமுதல்களாய் விளங்குபவை. இவையே மூவேந்தர் எனும் முத்தமிழ் வேந்தர் மரபிற்கும் ஒளி இலச்சினைகளாய் விளங்கியவை. இவை முக்கலை முந்நாடி முவ்வரசுக்கும் பொது.
புலி – வில் – கயல்
இவை மூவேந்தர் ஆணையில் இயங்கிய மூவரசு ஆட்சி இலச்சினைகள். அறத்தகைமையும் மறத்தகைமையும் ஒருங்கு அமையப்பெற்ற செங்கோல் ஆட்சி செய்திருத்தல் மூவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழர் அரசியல் பெருமரபு. மன்னுயிரைத் தன்னுயிராய் மதித்து ஆட்சிசெய்தல் தமிழர் பண்பாடு.
அருட்கை
‘அ’வில் தொடங்கி ‘ன்’னில் அடங்கிநிற்கும் மூலப் பெருந்தமிழ் அறிவறிதல் தரும் பயன்முழுதும் உள்ளிட்டுத் தோன்றும் தூய்மைத் தண்ணருள் குறியீடு. அத் தண்ணருள் அடைவதற்குத் தன்னை நன்றாகத் தமிழ்செய்தல் என்பதே மறக்கொணாத கடமையாகும்.
மலர்ச்சோதி
மாசற்ற வாலறிவுநிலை எய்துதல் தமிழ் கற்றதனால் ஆய பயனிலை ஆகும். மலர்தல் – மலர்ச்சியுறுதல் என்பது ஆன்மத்து அகமலர்ச்சி; ஓரறிவு எனத் தொடங்கி மேம்படுதல் உடையது உயிரறிவு. தன்னையறிதல் என்பது அதனுடைய மீயுச்சநிலை.
தன்னை அறிவறியப் பெறுவதோடு தன்னிலும் பிறிதிலும் வேறாக இல்லாத, தானொரு தானாய் – தன்னொடு தானாய் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து உள்ளிசையப்பெறுதல் என்பதே மலர்மிசை ஏகுதல்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்தல் என்பதன் அருட்குறியீடுதான் தாமரை மலர். ஆன்மத்து ஒளியில் வேறற இயைந்து விளங்கும் ஆதியை – வாலறிவை அடையப்பெறுதல் வீடுபேறு என விதந்து கூறப்படும்.
இயல் – இசை – நாடகம்
இவை முத்தமிழ் முக்கழகத் திருக்கூறுகள். இயலும் இசையும் நாடகமும் தமிழ்ஞான ஊற்றுகளாகும். தமிழ்ஞானம் என்பது இவற்றிலிருந்தே உள்ளும் புறமும் விளக்கமுறுத்தும் – கலக்கம் அறுக்கும். ஆய கலைகள் 64 என்பதும் இதில் அடங்கியிருக்கும். இதனை உளங்கொண்டுதான் திருமூலர் “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை” என்று ஓதியருளினார். உலகியலில் வேர்பிடித்து வளர்வித்தவண்ணமே மீமிசைத் தலத்திலும் ஒருங்கே சேர்த்தெடுத்துச் செல்லும் இயல்புடையது முத்தமிழ்.
அறம் – பொருள் – இன்பம் – வீடு
இவை மூலப் பெருந்தமிழ் மரபுகண்ட திருநான்மறை மரபு. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறத்தில் சேர்க்கும். அறத்தில் தலைபடத் தலைபடப் பொருள் ஆகிய வாழ்வியம் என்பதன் அகவிழுமியங்கள், புறவிழுமியங்கள் இரண்டையும் அடைந்து உய்யும் வகை கிடைக்கப்பெறும். அகத்தூய்மையால் அறத்தைப் பெறலாகும்; அறத்தால் பொருள்நலம் பெறலாகும்; இவ்விரண்டால் இன்பநலங்கள் செவ்விதின் வாய்ப்பதாகும். அறம்பொருளின்பம் என்று இயங்கி முதிர்ந்த நிலையில் நிலையாமை உணர்ந்து நிலைபேறு ஆகிய ஆன்ம விடுதலை எனும் வீடுபேறு அமைவுறும்.
அகம் – புறம்
இயற்கைப் பொருளியக்கம் இருமைவகை உடையது. அவையாவும் அகம்புறம் எனும் இரண்டாய் இயைந்து இயங்கும். தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் மனத்தூய்மை – வினைத் தூய்மை – இனத்தூய்மைகளால் வாழும் வகையறிதல் – வாழ்தல். அவ்வாழ்தலில் தீதும் நன்றும் பிறரால் வருபவை அல்ல; அவை தத்தம் அறிவு – அறியாமைகளால் வருபவை எனத் தெளிதல். அதனால், தன்னைச் சூழவுள்ள யாவரும் உறவுக்கினியவர்கள், அவர்கள்தம் ஊர்களும், நாடுகளும் தம் நட்புக்கு உரியவை என உணர்ந்து உணர்ந்து நிலைபெற்று நீடுவாழ்தல் – இனிது வாழ்வித்தல்.
ஐந்திணை
அன்பின் வழியது உயிர்நிலை எனும் அகத்தறிவும் புறத்தறிவும் பொய்க்காத பட்டறிவாக இசைந்துவருவதற்கு வாயிலாகவும் வாய்ப்பாகவும் இருந்தவை – இருப்பவை குறிஞ்சி- முல்லை – மருதம் – நெய்தல் – பாலை எனும் ஐந்து திணை நிலங்களேயாகும். இவற்றில் வேர்பிடித்து ஓங்கிநிற்கும் மூல மரபே மூலப் பெருந்தமிழ் மரபு. தெற்கேயிருந்து வடக்கேயும் மேற்கேயும் கிழக்கேயும் பரவி வேரூன்றி நிற்பது தமிழ்மரபியத்தின் வேர்மூலம் ஐந்திணைத் தமிழ்மண்ணே ஆகும்.
கொற்றக்குடை
மூலப் பெருந்தமிழ் மரபினை நிலைபெற முறைசெய்து காத்து நிழல்தருவதுதான் தமிழர் இறையாண்மை அல்லது அரசாண்மை. அதன் குறியீடுதான் கொற்றக்குடை.
எழுத்து – சொல் – பொருள்
இவை அனைத்தையும் நேர்பெற கற்கவும் கற்பிக்கவும் கற்றபடி நிற்கவும் நிற்பிக்கவும் தமிழோடு எழுத்தாகவும் சொல்லாகவும் பொருளாகவும் தழுவிக்கிடக்கும் அறிவுணர்வுக் கருவிகள்.
கற்க – நிற்க
மூலப் பெருந்தமிழ் மரபின்படி வாழ்பவர்களே முற்றும் முழுதும் தமிழர் ஆவர். எனவே, அவ்வாறு வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு மூலப் பெருந்தமிழ் மரபியத்தைக் கற்றாக வேண்டும். கற்ற பின்னர் கற்றபடி நிற்றல் வேண்டும். கற்றலும் கற்றபடி நிற்றலும் இம்மையிலும் மறுமையிலும் ஒருசேரசீர்த்திதரும்.

