• இந்தியா என்பது தெற்காசியக் கண்டத்தில் காணப்படும் பற்பல தேசிய இனங்களின் வழியில் தனித்தனியாக உருப்பெற்றனவாக இருக்கின்ற நாடுகளின் கூட்டிணைவு; இந்து என்பது அவற்றினது சமயநெறிகளின் கூட்டிணைவு என்பதாக விளக்கம் கூறப்படுவது புதுவது அன்று.
• இந்துக்களுக்கு எத்தனையோ மதம் இருக்கிறது. அவை அத்தனைக்குமான பொதுப்பெயர் இந்து என்றால், ஆறே ஆறு மதங்களை மட்டும் சண்மதம் என்று சொல்லி அவைதான் இந்துமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
• இந்து என்றால் இந்து தருமம் என்றால் சனாதன தருமம் என்று இந்து சங்கம் சொல்லிவருவது எப்படிப் பொருந்தும்?
• இந்து சங்கம் என்பது எல்லாச் சமயங்களையும் படிநிகர்க்கின்ற சமயக் கூட்டிணைவு அமைப்பா?
• அப்படியென்றால், அச்சமயங்களின் பட்டியல் யாது?
• முன்பெல்லாம் ‘இந்து’ என்பதற்குச் வடநாட்டிலே உள்ள ‘சிந்து’ என்ற சொல்லைக் காட்டிவந்தவர்கள் அந்தத் தடத்திலிருந்து அடியோடு மாறிவந்து இப்போதெல்லாம் ‘ஐந்து கரத்தனை’ என்ற பாட்டில் வருகின்ற ‘இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை’ என்ற பாடல் அடியைக்கொண்டு விளக்கம்கொடுக்கத் துணிந்து விட்டார்கள். இந்துசேகரன், இந்துவாழ் சடையன் என்று பிறைசூடியாகிய சிவனைக் குறிக்கும் சொற்களிருந்து சந்திரன் என்று பொருள்படும் இந்து என்ற சொல்லை வேர்ச்சொல்லாகக் காட்டுகின்றார்கள். இந்து என்பது வேர்ச்சொல்லா? வேர்ச்சொல் வடிவம் எதுவென்று தெரியுமா? தெரியாதா? இதற்கான வேர்ச்சொல் எந்தக் கருத்துவழி பிறந்தது என்று தெரியுமா? சும்மா வாய்க்கு வந்தபடி வேர்ச்சொல் என்று அள்ளிவிடுதல் எதற்காக?
• அப்படியென்றால் கூட, இந்துசமயம் என்பது சிவசமயத்தின் பெயராகுமே தவிர, பிறபிற சமயங்களுக்கான பெயராகவோ – எல்லா மதங்களுக்குமான பொதுப்பெயராகவோ வருவதற்கு வழியில்லையே? சிவசமய நூல்வழக்கில் எங்காவது இந்து என்ற சொல் அதனைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சான்று உள்ளதா? இல்லைப் பொதுப்பெயராக எந்தச் சமற்கிருத நூலிலாவது – தமிழ்நூலிலாவது ஆளப்பட்டுள்ளதா? “யாருக்குத் தெரியப் போகிறது?” அல்லது “யார் இதையெல்லாம் சான்றுகேட்டு வரப்போகிறார்கள்?” என்ற நினைப்பா?
• இவை போதாதென்று இன்னும் மேலேபோய் ‘இந்து’ என்ற பெயரைக் கூட ஒரு தமிழர்தான் ஆங்கிலேயர்க்குத் தெரிவித்தாராம்.
• சரி இருக்கட்டும். ஆங்கிலேயர் வருமுன்பே அரபிகளும் பார்சிகளும் ‘அல்ஹிந்த் – Al-Hind’ என்றும், வடநாட்டவர்கள் துருக்கர்களின் இசுலாமிய சமயத்தைத் ‘துருக்க தர்மா’ என்றும், தங்களின் சமயத்தை ‘ஹிந்த்து தர்மா’ என்று குறிப்பிடுவதற்கு அவர்கள் யாரிடத்திலிருந்து – எந்தத் தமிழரிடத்திலிருந்து ‘இந்து – ஹிந்து’ என்ற சொல்லைப் பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா? ஏன் இந்த கால முரண் – கருத்து முரண்?
• சரி போகட்டும்! அவரவரும் தத்தமது மதப்படி இருந்து வாழ்வதற்கு இடமுள்ள நாடு இந்தியா. அதனால்தானே, தேசிய மதம் என எதுவும் இல்லாமல், குறிப்பிட்ட எந்த ஒரு மதச்சார்பும் அற்ற நாடு என்று இந்தியக் கூட்டிணைவு குறிப்பிடப்படுகிறது.
• இந்தியக் கூட்டிணைவுக்கு உரிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கட்டமைத்த பல்துறைப் பேரறிஞர் அம்பேத்கர் அவர்கள் ஏன் தம் மக்களோடு ‘நான் இந்து அல்லன்’ என்று மனம்வெதும்பி அறவே கசந்துபோய்ப் புத்த மதத்துக்குப் போனார்?
• ‘நான் இந்து அல்லன்’ என்று அவர் இந்தியாவில் இருந்துகொண்டே சொன்னதும் அவர்தம் வழிஞர்கள் தொடர்ந்து அப்படிச் சொல்வதும் எப்படிச் சரியாகும்? இந்து என்பது எல்லார்க்கும் பொதுதானே? ஏன் அம்பேத்கருக்கு இது தெரியாதா?
• ‘நான் இனிமேல் இன்ன சமயத்தவன் அல்லன்’ என்று அல்லவா சொல்லி வெளியேறி இருக்கவேண்டும்? ஏன் ஒட்டுமொத்தமாக ‘நான் இந்துவே அல்லன்’ என்று இந்தியத் துணைக்கண்டத்துச் சமயப் பொதுக் கூட்டிணைவிலிருந்து வெளியேற வேண்டும்?
• ஆமாம், அவர் எந்தச் சமயத்தில் எப்படி என்ன தகுதி நிலையில் இருந்தார்? அவருக்கு அதிலே என்னென்ன குறைவந்தது? ஏன் அந்தச் சமயத்தை அவர் வெறுத்துவிட்டார்? நீங்கிவிட்டார்? அதுவும் காலமெல்லாம் பொறுத்துபொறுத்துப் பார்த்துப்பார்த்துக் கடைசிக் காலத்தில் நம்பிக்கையிழந்து எதுவும் இங்கு இனி மாறாது; நாம்தான் மாற வேண்டும் என்று மதம்மாறத் துணிந்திருக்கிறார். இஃது என்ன இசுலாமிய கிறித்துவச் சூழ்ச்சியா? சூதா?
• அம்பேதகர் விட்டுநீங்கிய அந்தச் சமயம் இன்னமும் இந்து என்னும் பொதுக் கூட்டிணைவில் இருக்கிறதா இல்லையா?
• அவர் எடுத்த முடிவு சரியா? பிழையா? அவர் மாறிச்சென்ற புத்த மதமும்கூட அதே இந்துக் கூட்டிணைவில் உள்ள மதம்தானே? உண்மையில், புத்தமும் வைதிகமும் ஆதிமுதலே கூட்டிணைவாக இருந்தவையா? இன்னமும் இருக்கின்றவையா?
• இந்து என்பதற்குரிய அரசியலமைப்புச் சட்டத்தில் மேல்கீழ் என்பதெல்லாம் குறிக்கப்பட்டுள்ளதா? இந்து என்பது மட்டுந்தான் அடையாளம் என்ற பின்னே மற்ற வகையான அடையாளங்கள் ஏன்? எதற்கு? யாருக்கு? அவை இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா? இருப்பது சரியா? தப்பா?
• இந்து என்பதன் வழியாக அனைத்திந்திய ஒருமைப்பாடு – கூட்டிணைவு உண்டாக வேண்டுமா? இல்லை, ஏற்றத்தாழ்வுப் பாகுபாடு – உள்ளுடைவுகள் உண்டாக வேண்டுமா?
• இந்திய அரசு என்பது மக்களிடையே ஏற்றத்தாழ்வுப் பாகுபாடு – உள்ளுடைவுகளை உண்டாக்கும் வகையில் செயல்படுகின்றதா? இல்லை, இந்து என்ற ஒரே ஒருமைப்பாடு – கூட்டிணைவு உண்டாகும் வகையில் அவரவரும் தத்தம் வழிமுறையில் இருந்துவாழ வகைசெய்திடும் அறத்தோடு அரசியல் நடத்திவருகின்றதா?
• இதற்கு மனுநீதி உதவுமா? திருக்குறள் உதவுமா? மனுநீதியும் திருக்குறளும் ஒரே நெறியைச் சாற்றுகின்றனவா?
• அம்பேத்கர் படித்தவர்தானே? ஏன் மதம் மாறினார்? அவர் இருந்த மதத்தில் யாருமே அவரிடத்தில் சென்று; “எப்பேர்பட்ட பேரறிஞர் நீங்கள். நீங்கள் நமது மதத்துக்கு எத்துணைச் சிறந்த உயர்ந்த மதிப்படையாளம். நீங்கள் இல்லாதுபோனால் நம் மதத்துக்கும் தேசத்துக்கும் பேரிழப்பு! இந்தியக் கூட்டிணைவுச் சட்டத்தை வரைந்தளித்தவர்க்கே அதில் நம்பிக்கைமுறிந்து மனம்வெந்து நொந்துபோனார் என்ற அவப்பெயர் ஆகிவிடுமே!” என்று யாராவது அவரைத் தடுத்துநிறுத்தினார்களா? கவலைபட்டார்களா?
• சரி அன்றுதான் இல்லை, இன்றாவது யாராவது கவலை படுகின்றார்களா? அவர்தம் வரலாறே இருக்கக் கூடாது என்றல்லவா உள்ளறுப்பு வேலைசெய்து வருகின்றார்கள்!
• பாலுக்கும் சீனிக்கும் – பட்டத்துக்கும் பதவிக்கும் – பொன்னுக்கும் பெண்ணுக்கும் – பொருளுக்கும் பகழுக்குமா அவர் மதம் மாறினார்? எத்துணைதான் கற்று உயர்ந்திருந்தாலும் எத்துணைச் சிறப்பு பெற்றிருந்தாலும் ஒருவரை அவர் வாழுங் காலத்திலும் அவமதித்து அவர் மறைந்துவிட்ட பின்னரும் தொடர்ந்து பெரிய வன்மத்தோடு அவமதித்துக்கொண்டுள்ள அந்த மதம் எந்த மதம்? அந்த மதத்தில் உள்ளவர்கள் ஏன் அந்தக் களங்கத்தைச் சட்டபடி நடவடிக்கை எடுத்து தமது கெட்டப்பெயரை நீக்கிக்கொள்ளவில்லை?
• இப்படி நல்லவர்களைப் புறக்கணிக்கும் அந்த மதம் யாருக்கு உரிய மதம்? அதனுடைய கொள்கைகள் என்ன? அவற்றைக் கற்றுக் கடைப்பிடித்துக்கொள்வதற்குரிய நூல்மரபு எது? அதற்கான நூலோர் யாவர்?
• இந்த மதம் ஒரு தனிமதமா? இல்லை, இதுவே ஒரு கூட்டுக் கலவை மதமா? இது தன்னைச் சேர்ந்தவர்களை அன்பினாலும் பண்பினாலும் ஒழுக்கத்தின் தூய்மையினாலும் சமத்தில் மதித்து இணைத்துவைத்துள்ளதா?
• இதற்கு விடைகூற முடியுமா? முடியாது என்றால், தலையிடாக் கொள்கையுடைய இந்துவாக இருக்கும் நீங்கள், உங்கள் கூற்றுப்படி மற்ற இந்துக்களின் சமயப் பற்றியங்களில் தலையிடாதீர்கள். நீங்கள் ஏன் தமிழர் சமயத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்? உங்கள் அறிவுரையை நீங்களே கேட்கவில்லையே? கடைப்பிடிக்கவில்லையே?
• ஆமாம்! தஞ்சைப் பெரியகோயிலில் சத்தியவேல் முருகனார் முதலானோர் தமிழில் குடமுழுக்கு நடத்த முன்னெடுப்பு செய்ததை ஏன் இந்துக்கள் என்போரே எதிர்த்தனர் – சைவ மடாதிபதிகளே எதிர்த்தனர்? அது என்ன வகை உரிமை?
• நடுநடுவே தமிழர் சமயங்கள் என்று சொல்கிறீர்கள். அவை எங்கே உள்ளன? யாருடைய கடைப்பிடிப்பில் இருக்கின்றன? அவற்றைக் கடைப்பிடிப்போரும் உங்கள் கூற்றுப்படி இந்துக் கூட்டிணைவில் உள்ளவர்கள்தானே? இந்துக் கூட்டிணைவில் உள்ளவர்கள் என்று ஒப்புவதானால், அவர்கள் அவர்களின் சமயப்படி இருந்துகொள்ள ஏதும் தடையுள்ளதா?
• அவர்களின் சமயப் பற்றியங்களில் ஏன் பிறர் வந்து தலையிட்டுக் குழப்பம் செய்கிறார்கள்? இந்து என்பதன்படி யாருடைய கருத்தோ செயலோ பிற பிரிவினர் மீது திணிக்கப்படுவதில்லை அல்லவா? தமிழர் சமயங்களில் வந்து குழப்படிகள் செய்பவர்கள் யார்? ஏன் அவர்கள் அவர்களின் மதத்தின்படி மட்டும் இருந்துகொள்ளவில்லை?
• மலேசியாவுக்கும் சங்கத் தமிழுக்கும் என்ன தொடர்பு? சங்கத் தமிழ் தமிழ்மண்ணைத் தன் எல்லையாகக் கொண்டது. மலாய்மொழி மலாய் மண்ணைத் தன் எல்லையாகக் கொண்டது. அந்தந்த நாட்டினத்தார் அந்தந்த நாட்டில் இருந்திருக்க வேண்டும்? ஏன் அடுத்த நாட்டுக்குப் போகவேண்டும்?
• அடுத்த நாட்டுக்குப் போனால்; அங்கு அரசியலமைப்புச் சட்டப்படிக் குடியுரிமைதான் கொடுக்கப்படும். மண்ணின் மைந்தர் என்ற தகுதி தரப்பட மாட்டாது. அதாவது, அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது அப்போது நாட்டுக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படிருந்த எல்லா இனத்தவர்க்குமாக எல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டன. அவரவர் தகுதிநிலை அறிந்து நடந்துகொள்வதுதான் வாழும் வகையறிந்து வாழும் நல்லறிவு.
• குடியுரிமை வழியாக மலேசியர் என நாட்டினமாக மட்டுமே அடையாளம் தரப்படும்; மலாயர் – மண்ணின் மைந்தர் என்று அடையாளம் தரப்படமாட்டாது. மலேசியாவில் அனைத்து இனங்களும் தேசியத்தால் ஒருவர். ஆனால், மலாயர் – மண்ணின் மைந்தர் என்பவர்கள் ஒருபோதும் தங்களின் மரபுரிமை சிறப்புரிமைகளை எந்த நிலையிலும் மற்றெந்த இனத்தவர்கும் விட்டுத்தரமாட்டார்கள். அதே வேளையில், பிற இனங்களுக்கு வரைசெய்து வகுத்து வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டப்படியான எந்த உரிமையையும் தட்டிக்கழிக்க மாட்டார்கள்.
• மலேசியாவில் இருப்போர் மலேசியர் என்பதில் உங்களுக்கு என்ன ஐயம் வந்தது? மலேசியர் என்று இருப்பதற்கும் வாழ்வதற்கும் அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்புண்டு உரிமையுண்டு. சங்கத்தமிழ் சிங்கத்தமிழ் தங்கத்தமிழ் என்பதனாலோ, அதற்கு உரியவர்கள் என்பதனாலோ இல்லை. இது கூடவா உங்களுக்குத் தெரியாது? ஐயோ பாவம்?
• சங்கத் தமிழில் – பத்தி இலக்கியம் கண்ட சமயத் தமிழில் இல்லாத எதையும் – சொல்லாத எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதற்கு எதன் தொடர்பில் ஏன் எப்போது யார் சொல்கிறார்கள்? என்ன ஐயா இப்படி உளறுகிறீர்கள்?
• இந்தியா என்பது கூட்டிணைவு அதுவும் ஒரு துணைக்கண்டக் கூட்டிணைவு. கூட்டிணைவுக்குள் கொண்டுவரப்பட்ட கூட்டிணைவுச் சட்டப்படி அதிலே உள்ளவர்க்கெல்லாம் வாழும் உரிமை வரம்புகள் உள்ளன. மலேசியாவில் குடியேறியதைப் போலத் தமிழர்கள் இந்தியாவில் வேறெங்கிருந்தோ வந்து குடியேறியவர்களா? இல்லை, என்றுமுள்ள தமிழ்மண்ணின் மைந்தர்களா? காலங்காலமாக இருந்துவரும் தமிழர் என்னும் இனப்பெயரைக் கூறுவது இனவாதம் என்பது எந்த நாட்டு அறிவுஞாயமோ?
• இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது என்ன சங்கத்தமிழ் அரசியலமைப்புச் சட்டமா? அட! சங்கத்தமிழ் விளங்கியிருந்த தமிழகத்தில் கூட அந்தந்த நாடும் தனித்தனியே சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு, … என்று தத்தம் சொந்தப் பெயரில் அதனதன் சட்டமுறைகளோடு சான்றோர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன்னுரிமையோடு விளங்கியிருந்து வந்துள்ளது வரலாறு. இது உங்களுக்குத் தெரியாதா?
• அவை தமிழ்கூறு நல்லுலகம் – தண்டமிழ்வேலித் தமிழ்நாட்டகம் என்ற பெயரில் கூட்டிணைவுகொண்டு தன்னதிகாரத்தோடு இருந்து வந்துள்ளன.
• இது தமிழர்கள் தன்விருப்பமாக அகம்கூடி வாழ்ந்திருந்த வரலாறு.
• இந்தியா என்பது என்ன தமிழர்கள் தன்விருப்பமாக அகம்கூடிச் சரிநிகர் சமத்தில் இணைந்துகொண்ட அரசியல் கூட்டிணைவா? அப்படிக் கூடியபோது தமிழரிடத்தில் அவர்களின் விருப்பம் கேட்டுக் கொள்ளப்பட்டதா?
• இந்தியத் தேசியம் பேசப்பட்ட போது – செயல்பட்ட போது அதற்குப் தமிழர்கள் பங்களிக்கவில்லையா? பங்களித்த தமிழர்க்கு ‘எல்லாரும் இந்தியக் குடிமக்கள்’ என்ற சமநிலையில் வைத்து சரிஞாயத்தோடுதான் எல்லாம் நடக்கிறதா?
• எதுவும் யார்மீதும் திணிக்கப்படுவதில்லை என்கிறீர்கள். இந்திமொழி ஏன் திணிக்கப்படுகிறது? அதுவும் இந்திய விடுதலைக்கு முன்னரே 1938இலேயே ஏன் திணிக்கப்பட்டது ஏன்? வெள்ளையர்களா திணித்தார்கள்? விடுதலைக்குப் பின்னரும் மறுபடியும் திணிக்கப் பட்டது ஏன்? இந்திக்குத் தமிழ் என்ன ஏப்பைசாப்பையா? கிள்ளுக்கீரையா? இந்திய இணைவுக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு?
• அதனை எதிர்த்து மொழிப்போர் செய்த அன்றைய தமிழத் தலைமுறை என்ன தறுதலையா? இந்தியாவிற்கு எதிராடியவர்களா?
• அவரவரும் அவரவர் வழிமுறையில் அவரவர் மண்ணில் அவரவர்தம் அதிகாரத்தோடு இருந்துகொண்டு; பொதுக் கூட்டிணைவுப்படிப் பொதுநன்மைக்கான பற்றியங்களில் கூடிக் கலந்தாய்ந்து செயல் கண்டு உறவுபேணி வருவதற்குரிய வழிமுறையில்தான் இந்தியா கூட்டிணைவுச் சட்டப்படிதான் நகர்கின்றதா?
• இப்போதும் தமிழர்கள் கோபப்பட கொந்தளிக்க ஒன்றுமே அங்கே அறந்தவறி நடக்கவில்லையா?
• தமிழர் மண்ணிலேயே தமிழர் வரலாற்றுத் தலங்களில் அதுபற்றிய ஆய்வுகளில் இருட்டடிப்புகள் செய்யப்படவில்லையா? இதற்குப் பெயர் இந்தியக் கூட்டிணைவா? தமிழ் சமற்கிருதத்தைவிட மூத்தது சமற்கிருதம் உள்ளிட்ட அத்தனை மொழிக்கும் மூலமுதலானது என்ற உண்மையைப் புறக்கணிப்பது தேசிய ஒருமைப்பாடா? ஏன் இந்த உண்மையை மற்றவர்களால் ஒத்துக்கொள்ள முடியவில்லை?
• இந்து என்று சொல்லிக்கொண்டு தமிழ்மரபியத்தை அதற்குள் கொண்டுசென்று அங்கேயும் சமற்கிருதத்தின் கீழ்ப்படுத்திவைத்தல் அறமுடைய செயலா? அறிவுடைய செயலா? அநாகரிக அழிம்புச் செயலா? இதுதான் எந்தத் திணிப்பும் அழிப்பும் இல்லாத இந்துக் கூட்டிணைவா?
• வடக்குதெற்கு என்ற வேற்றுமையே கிடையாதா? எல்லாம் எல்லாவிடத்திலும் இந்து – இந்தியக் கூட்டிணைவு உணர்வோடு நடக்கிறதா? உணவு, உடை, கருத்து, … என்று எதிலுமே ஒரு வேறுபாடும் இல்லையா?
• தமிழகத்திலேயே அரசு அலுவலகங்களில் இந்தியில் கேட்டால்தான் கவனிக்கப்படும் இல்லாவிட்டால் புறக்கணிக்கப்படும் என்பது வடக்கா தெற்கா?
• வடநூல் மரபு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு வடநாட்டவர்களால் இந்துவியம் பேசப்படுவதும் பரப்பப்படுவதும் வடக்கா தெற்கா? தமிழ்நூல் மரபு அடியோடு புறக்கணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்பது வடக்கா தெற்கா?
• நீ இந்தி கற்றுக்கொள்! இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியன் இல்லை – ‘Anti Indian’ என்று வல்லடி வழக்கிடுவது வடக்கா தெற்கா?
• என்னவோ இந்தியக் கூட்டிணைவில் எல்லாம் அறத்தோடு இருந்துவருவது போலவும், அதுபற்றிக் குற்றங்கூறுதல் என்பது அறமே இல்லாத அடாவடிச் செயல் என்பது போலவும், அப்படிக் கேட்கும் தமிழர்கள் முரட்டுத்தமிழர் – குருட்டுத்தமிழர் என்று முத்திரை குத்துவது என்ன அறமோ?
• மலையாளம் உள்ளிட்ட திரைப்படத்தில் தமிழர்களை நக்கல் செய்வதுவும்; கன்னடத்தில் கடையில் தமிழில் தமிழெழுத்தில் பெயர் இருக்கக்கூடாது என்று பதாகைகளைக் கிழித்தெறிவதுவும்; பலகைகளை உடைத்தெறிவதும்; தமிழர்கள்மேல் மொழிவெறி – இனவெறித் தாக்குதல்கள் நடத்துவதுவதும்; … இந்தியக் கூட்டிணைவு அரசியலமைப்புச் சட்டப்படி சரிதானோ?
• எந்தத் திணிப்பும் திரிப்பும் செய்யப்படவில்லை – செய்யப்படுவதில்லை என்று சொல்லிக்கொண்டு; தமிழ்க்கல்விப் பாடத் திட்டத்தில் – பாடப் புத்தகத்தில் தமிழ்மறைப்பு – தமிழ்ச் சான்றோர் மறைப்பு – தமிழ்மரபு மறைப்பு செய்யப்படுவதெல்லாம் எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
• இந்து என்பதற்கு உள்ள அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் யாவை? ஆர்.எசு.எசு. கோருவதற்கெல்லாம் அதில் இடம் உள்ளதுவா? தமிழர் என்று கோருவதற்கெல்லாம் அதில் தடை உள்ளதா?
• தமிழ் செம்மொழி என்பதை ஆயிரம் ஆண்டளவில் பழைமையுள்ள மொழியில் சேர்த்த இந்திய அரசின் செயல் என்ன அறிவுஞாயம் கொண்டிருக்கின்றது? திருக்குறளே இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்டது அது அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள் ஒப்புக்கொள்கின்ற கூற்றுப்படிப் பார்த்தாலும் சங்க இலக்கியக் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு இல்லையா? நீங்களும் இந்து – இந்தியப் பேருணர்வால் அதைப் பொருட்படுத்தாமல் தாளம்போட்டு மகிழ்கின்றீர்களா?
• ‘ஆசிரியர் நாள்’ என்பதை ‘குரு உத்சவ்’ என்று மாற்றச் சொல்கிறதா இந்தியக் கூட்டிணைவு அரசியலமைப்புச் சட்டம்?
• அதனுடைய தாக்கம் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளிலும் இந்து சமயப் படியாக ஆசிரியர்களை – குருவைக் கொண்டாடிப் போற்றுதல் என்ற பெயரில் வரவேண்டுமா? மலேசியக் கல்விச்சட்டம், மதவுரிமைச் சட்டம் என்பவற்றின்கீழ் மலேசிய அரசியலமைப்புச் சட்டம் இப்படிச் செய்யச் சொல்கிறதா?
• தமிழ்ச்சொற்களை நீக்க வேண்டும்; அயல்மொழிச் சொற்களை அப்படியே ஏற்க வேண்டும் என்று கல்வி அமைச்சு சொல்கிறதா?
• சங்கக் காலத்து வைதிகத்தை மறுக்கிறீர்கள், நாயக்கர் கால வைதிகம் பழகிவிட்டது என்கிறிர்களே? எப்படி? இஃது என்ன அறிவுஞாயம்? நாயக்கர் காலத்தில் நம்பியபடியே எல்லாவற்றையும் நம்புகிறீர்களா? அப்படியேதன் அச்சுமாறாமல் கடைபிடித்து நடக்கின்றீர்களா? [ஓ! புரிகின்றது! புரிகின்றது! ஆமாம், சங்கக் காலம் மிகு தொலைவானது; தொலைந்துபோனது. சங்கக் காலத்துப் பழக்கவழக்கம் இப்போது உங்களிடம் இல்லை; தெரியாது. நாயக்கர் காலம்தான் உங்களின் வாழ்க்கையில் நிலைகொண்டுள்ளது. அது இந்து என்பதற்கு எல்லா வகையிலும் ஒத்துவருகின்றது.]
• வடுக மன்னர்கள் வஞ்சகர்கள். ஆனால், அந்த வஞ்சக மன்னர்கள் இட்ட ஆணைப்படி தமிழ்ச்சுவடிகளைச் சமற்கிருதத்திலும் தெலுங்கிலும் பெயர்த்தளித்த வடுகப் பிராமணர்கள் அப்பாவியா? வடுக மன்னர்கள்தான் குற்றவாளிகளா? அந்தக் குற்றவாளிகளுக்கு உடந்தையாகி அதிலே வரும்படி பார்த்தவர்கள் குற்றமற்றவர்கள் – அப்பாவிகள்! இந்தப் புரட்டு வேலையைக் கூட ஞாயப்படுத்திப் புரட்டிச்சொல்லும் – நம்பிக்கொள்ளும் நீங்கள் தெளிவானவரா? நாங்கள் தெளிவற்ற முரட்டுத் தமிழர்களா?
• ஆகவே, நாயக்கர் காலத்தில் பழகிவிட்ட பழக்கத்தால், அப்படியே மாறாமல் முன்னிருந்தபடியே இருந்துவந்தால் அவன் இந்து. அப்படிப் பழகியிருந்து வந்ததுதான் தன்னை தாழ்த்திவைத்து அவமதிக்கின்றது – அசிங்கப்படுத்துகின்றது – மானங்கெடுக்கின்றது – கல்விபெறக் கூடாது என்கின்றது – கோயிலுக்குள் வராதே தீட்டு என்கின்றது என்பன போன்றவற்றின் காராணமாக எதிர்த்துக் கேட்டவர்கள் – கேட்பவர்கள் முரட்டுத் தமிழர்கள்; இந்துவாக மாற மறுத்து வருகின்ற தமிழர்கள் முரட்டு அடம்பிடிக்கின்றவர்கள்; குருட்டாட்டம் ஆடுபவர்கள் – குருடும் குருடும் குழியில் விழும். இதற்குத் திருமந்திர மேற்கோள் வேறு.
• நல்ல ஆட்டம் உங்கள் ஆட்டம். மனச்சான்று இல்லாத இனமானமும் மொழிமானமும் சவுத்துப்போய்ப் புதமைக் கால வயபட்ட கயமைப் பித்தலாட்டம்.
• இதில் நீங்கள் கொண்டுள்ள நிலை இசைஞானி இளையராஜா நிலை. மணலுக்குள் தன் தலையைப் புதைத்துக்கொண்டுவிட்டதால் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று தனக்குத்தானே நினைத்துக்கொள்கின்ற நெருப்புக்கோழி அறியாமை. அதுதான் உங்களிடம் ஒருபக்கம் இந்து முழக்கம் மறுபக்கம் தனித்தமிழ்ப் புழக்கம்.
• மூலப் பெருந்தமிழ் மரபினை உருத்திரித்து (மொழித்திரிந்து இனந்திரிந்து நெறிதிரிந்து) ஆரியம் என்று ஆக்கியது – ஆகியது ஆகிப் பிரிந்துவிட்டு – பிரித்துவிட்டு; இப்போது தமிழரகள் முரடர்கள் – குருடர்கள் என்று சொல்கிரீர்களே நீங்களெல்லாம் உண்மையாகவே தமிழ்ப்பிறவிகள் தானா?
• திரிபுபட்டு அகம்கெட்டுப்போய் ஆரியமாகி – வைதிகமாகி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு; ஒட்டுமொத்தத்தையும் கூறுபோட்டு ஒன்றுக்கு ஒன்றை எதிராக்கி வைத்து – ஓயாமல் மோதவைத்து மூலப் பெநெறியையும் ஒரே பெருந்தமிழப் பேரினத்தையும் இத்துணைக் காலமாகச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிவிட்டு; ஏதோ இந்துக் கூட்டிணைவு என்பதாக போலிப் பொய்க்கூவல் கூவிக்கொண்டுள்ள நீங்களெல்லாம் நல்லவர்களா?
• எல்லாம் ஒழுங்காக – ஒன்றாக இருந்தன. அவற்றைத் திரித்து வேறாக்கியது அல்லாமல், மூலத்தை மனமார மறைத்துவிட்டு; தெய்விகம் கூறிக்கொண்டு; அடாத அட்டூழியச் செயல்களால் சொந்த மக்களைக் கொடுமைப்படுத்தி அவர்களுள் ஒருசாரார் இந்த மதத்தைவிட்டே ஓடிப்போகும் அளவுக்கு எல்லாவற்றையும் இன்று வரைக்கும் செய்துகொண்டே ஒற்றுமை – ஒருமைபாடு – மதமாற்றத்தைத் தடுத்துநிறுத்துவோம் நன்றாகவே நடித்துக் கொண்டுள்ள நீங்கள்தான் உண்மையாகவே இறையச்சமும் இறைப் பற்றும் சமத்திறச் சமயநெறிக் கடைப்பிடிப்பும்கொண்டு வாழ்வவர்களா?
• முதலில், மூலநிலையைச் சிதைத்தீர்கள்; அதன்வழியாக ஆதிமுதல் இருந்துவந்த ஒருமைப்பாட்டைப் பிளந்துபோட்டீர்கள். உங்கள் சார்புக்கு உயர்வுக்கூறிப் பிறரது சார்புக்கு இழிவுகூறினீர்கள். பின்னர், இந்த மதமே வேண்டாம் – வேண்டவே வேண்டம் என்ற அளவுக்கு அழிப்புகள் செய்து பலரை இங்கிருந்து ஓடச்செய்தீர்கள். இப்போதும் நீங்கள்தான் மூலநிலையினை மறைக்கிரீர்கள் – மறுக்கிறீர்கள். உங்களால்தான் உங்களால் மட்டுந்தான் இன்னமும் மதம்மாறிப் போய்க்கொண்டு உள்ளார்கள்.
• மதம் மாறிப்போனவர்கள் வாய்ப்பு பார்த்து உங்களையும் உங்கள் திரிபு மதத்தையும் பழிவாங்கும் நோக்கத்தோடு நீங்கள் சொல்லி வைத்துள்ள ஈனச்செய்திகளையே கருவிகளாக ஆக்கிக்கொண்டு உங்களையும் உங்கள் மதத்தையும் அசிங்கப்படுத்துகிறார்கள் – காட்டிக்கொடுக்கிறார்கள் – முடிந்தால் அடியோடு அழித்துவிடவும் கங்கணங்கட்டிக்கொண்டு துணைபோகின்றார்கள்.
• நாங்கள் யாரும் மதம் மாறவும் இல்லை; மாண்பு தெரியாத உங்களது வஞ்சக உறவினையும் ஏற்கவில்லை. நாங்கள் நாங்களாக இருந்துகொள்கின்றோம். சும்மா ஒருமைப்பாடு என்று சிரிப்பு காட்டாதீர்கள்!
• இணைவு என்றால் என்ன? கூட்டிணைவு என்றால் என்ன? இரண்டல்லாத நிலையில் ஒன்று மட்டுமாக நன்கு பொருந்தியதாகி இணைந்து இருப்பது இணைவு. அதனதன் தனித்தன்மையோடு இருந்துகொண்டு – ஒன்றினுடைய தனித்தன்மையை மற்றொன்று கெடுக்கின்ற நிலைக்கு இடமில்லாத வகையில் பொதுவுறவுக் கூறுகளை முன்வைத்து நாணயமாக நடப்பதன் வழியாகப் வருக்கின்ற நல்லுறவினால் கூட்டமைப்பாக இருப்பது கூட்டிணைவு.
• யாவர்க்கும் பொதுக் கூட்டிணைவுக்கு உரியதான பொதுப்பெயரைத் தன்னுடையதாக வசப்படுத்திவைத்துக் கொண்டு; பொது என்பதே நாங்கள்தான்; எங்கள் கொள்கை வழிமுறைதான்; எங்கள் கொள்கைத் தலைமை அல்லது நூல்மரபுவழி அறிவுத் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள்தான் – சார்ந்து வருபவர்கள்தான் என்ற நிலைபாடு என்ன வகையில் எப்படி இணைவு – கூட்டிணைவு ஆகும்? தமிழ்மரபியம் என்று சொல்லக்கூடாது சனாதனம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எங்கள் மரபுநிலையை மறுக்கின்ற – மறைக்கின்ற – தடுக்கின்ற – அழிக்கின்ற சொல்லும் செயலுங்கொண்ட உங்களுக்குக்கீழ் நாங்கள் அடையாளமும் மரபுரிமையும் இழந்து அடங்கிப்போக வேண்டுமா?
• ஆகமொத்தத்தில், இந்தத் தன்வயமாக்கம் தன்மயமாக்காம் என்ற வன்கவர்பு போக்கினால் எல்லாவற்றையும் முதன்முதலில் கெடுத்துச் சீரழித்தவர்கள் நீங்கள்தான். எரிநரகத்தைவிடக் கொடுமையான உங்கள் திரிப்பு நெறியின் வெறிநெருப்பில் விழுந்து சாக விரும்பாத காரணத்தால்; கால வகையினால் தேடிவந்த மாற்று மதங்களைத் தழுவிக்கொண்டு புதுவாழ்வு பெற்றுக்கொண்டதற்கும் நீங்கள்தான் காரணம். இன்றைக்கும் தொடர்ந்து மூலத்தமிழ் மரபு நிலைகொண்டு இருப்பவர்கலையும், தெறித்து ஓடிப்போய்விட்டவர்களையும் வம்புக்கு இழுப்பதும் திமிர்த்துப்போய்ப் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் குத்தலாட்டமும் செய்துகொண்டு – இருக்கும் அமைதியையும்கூடச் சீர்குலைத்துக் கொண்டு உள்ளவர்களும் நீங்கள்தான்.
• போதுமையா! உங்கள் பொதுமையன்புச் சாயம் வெளுத்துவிட்டது! உங்கள் ஒருமைப்பாட்டுப் பாசவலை அறுந்துவிட்டது. உங்கள் பொதுக் கூட்டிணைவுச் சாக்கடை மதத்தை உங்களோடு உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் – தமிழர் – தமிழியம் என்பவற்றில் கொண்டுவந்து கலக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களுக்கு இங்கு வேலையே இல்லை. இங்கே வராதீர்கள்.
• தெரியாதவர்களுக்குத் தெளிவுபடுத்தலாம். நன்றாகத் தெரிந்தே நடிப்பவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது? காலம் உங்களுக்கு ஒரு தீர்ப்பைச் சொல்லும்!
• எதிரிகளுக்குத் தமிழ்மொழியைக் காட்டிக்கொடுத்து – தமிழ் இனத்தைக் காட்டிக்கொடுத்து – தமிழ்ச்சமயத்தைக் காட்டிக் கொடுத்து உடம்பளவில் மட்டும் இருக்கின்ற இயல்பழிந்துபோயுள்ள குருதிவழி மரபணுக்களோடு உயிர்த்திருக்கின்ற நீங்களும் – தமிழன்றி மற்றொன்றில்லாத முழுமைத் தமிழர் நாங்களும் ஒரே தரத்தில் – ஒத்த அறத்தில் உள்ள தமிழரா?
• திரிப்புக்கே இவ்வளவு திமிர்ப்பு இருந்தால்; உண்மைக்கு எவ்வளவு திமிர்ப்பு இருக்கும்!
• திருக்குறளின் கயமை அதிகாரம் உக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை முகத்தில் அடித்தாற்போலச் சொல்லிவிடும்.
• உங்களிடம் உள்ளதும் நீங்கள் கூடிக்கொண்டு உள்ளவர்களிடத்தில் உள்ளதும் கயமை அதிகாரம்தான்.
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து – குறள் 1080

Leave a Reply