
எல்லோரையும் போல நானும் ஓர் எளிய மாந்தன். எல்லா உயிர்களையும் போல நானும் ஓர் எளிய உயிர். இவ்வுயிர்கள் உலகத்தில் பிறந்து வாழ்ந்துவரும் வாழ்க்கையினைக் குறித்தும், அதனை எவ்வாறு நடத்திச்செல்ல வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு நிலைசார்ந்தவர்களின் கருத்துரைகளும் கணிப்புரைகளும் காட்சியுரைகளும் கண்முன்னே விசும்புபோல் விரிந்துநிற்கின்றன.
வாழ்க்கை என்கின்ற ஒன்று; காலம் என்ற ஒன்றின் ஓட்டத்திலே இயங்கிவருகின்றது. அந்த இயக்கத்திலே, மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாய்த் தனித்தனிப் பெயரில் திரண்டு கூடிக்கொண்டு வெவ்வேறு போக்கில் இயங்குகின்றனர். ஆனால், மக்களின் எல்லா வகையான புறநிலை வேறுபாட்டுக்கும் அப்பாற் பட்டு; எல்லோரையும் எல்லாவற்றையும் சமத்திறமாக உள்நின்று ஒத்துணருமாறு ஒருங்கிசைத்துக் கொண்டதாக, விளக்கி முடியாத ஒரு பொதுமையும் ஆராய வல்லார்தம் அகத்திலே ஐயந்திரிபறக் காணக்கிடக்கின்றது.
‘ஒருதிருப்பொது’ என்று அதனை வள்ளற்பெருமானார் குறிப்பிட்டு உணர்த்துகின்றார். ஆயின், அஃது எவருடைய அகத்திலும் முற்றும் அடங்கியதாக இல்லை. அதே வேளையில், எவரையும் விட்டு விலகியதாகவும் இல்லை. வரையறைப்படுத்திக் கூறுவது என்பது எத்தகையவர்க்கும் அரிதிலும் அரிது. அது பெரிதிலும் பெரிது; நுணிதிலும் நுணிது; நணிதிலும் நணிது; சேய்திலும் சேய்து.
அவ்வகையில், எனக்கு இரண்டு நிலைகள் அறிவறியும் வாய்ப்புகளாக இருப்பதை நான் உணர்கின்றேன். ஒன்று, என் பிறப்பால் நான் பெற்றுள்ள மரபு சார்பு. மற்றொன்று, எல்லா மரபுகளுக்கும் இடந்தந்துகொண்டு; அவற்றுக்கெல்லாம் ஒரே அடிமூலமாக நின்று உறவளித்து; அரவணைத்துக் கொண்டுள்ள இயற்கைப் பொதுமைச் சார்பு.

இவ்விரண்டுக்கும் உள்ள இயைபினைத் தேடினேன்; அதே போல இயைபின்மையையும் தேடினேன். உலகத்தார்க்குப் பொதுவாகப் பொருந்தக்கூடிய கூறுகளுக்கு முன்னுரிமையளித்து இடைவிடாது என் தேடலைத் தொடர்ந்து செய்துநிற்கின்றேன். எனக்கு என் அகத்திலே தட்டுப்பட்ட அதன் அடிப்படைகளையும் பொதுப்படைகளையும் அறிவறிந்து தேறித் தெளிந்துகொள்ள வாய்க்கின்றது.
அவை யாவும் ஒருங்கியைந்து ஒரு பயண வழிகாட்டி வரைபடம்போல வடிவுற்று எழுந்துள்ள கருத்தியல் திரட்டுதான் இந்த ‘ஒளிநெறியே தமிழ்ச்சமயம்’ என்னும் நூல். இதனை நான் பிறந்த மரபு நிலையிலிருந்து தொடங்கி; நானும் பிறரும் என எல்லோருமே சென்று நிறைவுறும் அந்த ஒருதிருப்பொதுவை நோக்கி முடித்திருக்கின்றேன்.
இஃது இதற்கு முன்னம் வழிநடந்தோரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஒரு வழிகாட்டி வரைபடம். இதுவே அந்த வழியும் அதிற் செல்லுகின்ற பயணமும் அன்று. மாறாக, இதைக் கொண்டு வழியினைத் தீர்மானித்துக் கொள்ளவும்; அதற்கு ஆவன தேடிச் திடஞ்செய்துகொண்டு பயணத்திற்குத் திட்டமிடவும் கூடும்.
எங்கோ ஒரு பகுதியில் தொடங்கி; முழுமைக்குள் புகுவதற்கு முன்னோர்கள் கொண்டிருந்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்புகளும் கருத்துகளும் இதிலே விரிவாக எடுத்துப் பொதுமைப்படப் பேசப்படுகின்றன. நம்பிக்கை > சமயம் > மதம் > செந்தண்ணெறி என அவை படிநிலைப்பட்டுள்ளன.
அறிவறிந்து அறிவறிந்து நிலைபெயர்ந்து அகம் உயர்ந்து இறைநிலைக்குள் உருகிச்செல்கின்ற அகப்பண்பு அணுகுமுறை இக்கால் ஒடுக்கமுற்றதாக இருப்பதை நான் உணர்கின்றேன்.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்னும் இயற்கைப் பொதுமறையின் வழிசென்று; இயற்கை உண்மை அறிந்து, இயற்கை விளக்கமுற்று இயற்கை இன்பம் எய்துதற்கு உள்ளமுடையோர் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளைக் கூறி இவ்வரைபடத்தை உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றேன்.
மொழி : தமிழ்
இனம் : தமிழர்
வழி : தமிழியம்/*தமிழ்மம்
வழிசார்ந்தோர் : தமிழியர்/*தமிழ்மர்
குறிப்பு:- *தமிழ்மம் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்க்கும் உலகர்க்கும் ஏற்புடைய தமிழ்ப்பொதுமைக் கூறுகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படும் மெய்யியல் நெறி. இது மெய்மம் மிக்கது; அதனால்தான் தமிழ்மம் எனப்படுகிறது.
தன்னை அறியத் தருவதெஃதோ
அதுவே சமயம் எனக்கண்டோம்
தன்னைத் தனக்குக் காட்டுவதாய்த்
தன்னை உடைய தலைமையையும்
தன்னில் உணரக் கூட்டுவதாய்த்
தன்னைச் செம்மை செய்தளித்துத்
தன்னொடும் கிடக்கும் பொதுமைஎஃதோ
அதுநம் உயிர்மெய்ச் சமயமாமே!
பணிவன்புடன்,
இர. திருச்செல்வம்

Leave a Reply