தமிழரெல்லாம் அறிவறிந்தார் அல்லர் கண்டாய் !
தமிழரெல்லாம் மூடர்களும் அல்லர் கண்டாய் !
தமிழரென்றோர் பொதுமையுள்ள தேனும் அந்தத்
தமிழரெல்லாம் ஒத்துணர்ந்தார் அல்லர் அறிவாய்!
தமிழருள்ளும் ஆசையுட்பட் டவர்கள் எல்லாம்
அவாவினால்வீழ்ந்(து)அவநெறிப்பட் டிருந்தார் உண்மை !
தமிழருள்ளும் அறத்தின்பாற் பட்டோர் தாமே
அறம்பொருளின் பம்வீடு கண்டெய் தினாரே!
ஆரியம் மட்டுமோ அன்னியம்
அன்றன்(று) ! அன்று கண்டாய்!
ஆரியத் திற்குக் குன்றா
அன்னியம் கண்டாய் திராவிடம் !
பூரியம் இரண்டுமே பூரியம்
ஒட்டுண் ணிக்குணக் காரியம் (கார் + இயம்)
ஓரியம் உலகுக் கெல்லாம்
உறவியம் தமிழியம் ஒன்றே ! 1
ஆரிய அறிவியம் வேதியம்! – நல்
அரபிய அறிவியம் மகமதியம்!
கூரிய இயூத அறிவியம்தான்
ஊர்-ஆப் பிரகம் இயூதவியம்!
மீறிய இயூத மீட்பியம்தான்
மேன்மைக் கிறித்தியம் இவைபோல
நேரிய தமிழ் அறிவியம்தான்
நேயம் வளர்க்கும் தமிழியமே!
அரபு பார்சி நாட்டவர்கள்
வடநாட் டவரை இந்தென்றார்!
அரபு பார்சி வழிசார்ந்த
மங்கோ லியர்தாம் மொகலாயர் !
அரபு பார்சி மொகலாய
ஆட்சியில் அடிமை ஆனபின்னர்;
மரபு பெயரும் மதப்பெயரும்
மாற்றி இந்தென்(று) இட்டார்கள்!
அறிவர் ஆழ்வார் நாயன்மார்
யாருமே இந்தெனச் சொல்லவில்லை!
அறிய வேண்டும் வரலாற்றை
அறிந்தால் புரியும்இக் கோளாறு !
திரிய வைத்த பெயரிதனைத்
திரித்து வைத்தவர் வெள்ளையர்கள் !
தெரியத் தெரியப் புரிந்துகொள்வீர்
இந்து அல்லநாம் தமிழரென்றே!
மொழியால் இனத்தால் சமயத்தால்
முன்னும் பின்னும் நாம்தமிழர்!
தெளிவாய் நம்மறை திருக்குறளே
இருக்கு முதல்அந் நான்கல்ல!
வழிவழி தமிழ மரபினத்தில்
வந்தவர் வழிநம் நூல்முறையே!
ஒளிவழி ஒருமை ஆன்மத்தில்
உணர்ந்து ஒழுகுதல் ஒளிநெறியே!
மொழியில் எல்லாம் முதற்றிவைத்தார்!
மொழிக்குள் எல்லாம் அடக்கிவைத்தார் !
மொழிவழி எதையும் பொதுப்படுத்தல்!
மொழிவழிப் பொதுவாய்ப் பெயர்வைத்தல்!
மொழிவழி மூன்று நாடுகளை
ஒன்றாய்த் தமிழகம் என்றுரைத்தார்!
மொழிவழிப் பொதுமை செய்தமுன்னோர்
முதுவழி பற்றுதல் நம்கடனே!
வழிவழி மொழிவழிப் பெயர்பெறும்நம்
மரபு முறைமை நாமறிந்தோம்!
மொழிவழி நாட்டைச் சமயத்தை
மொத்தமாய் வைத்துப் பொதுசெய்து;
மொழிவழி உறவினை முன்வைப்போம்,
மொழிக்குள் சமயத் திரள்வைப்போம்!
மொழிவழி உறவே சரிநிகராம்
உளம்பயில் நெறியெலாம் பொறைநெறியாம்!
செந்தமிழ் சிவணி இயங்கிய
எம்மினப் பரப்பே நாவலம்!
முந்தையர் படர்ந்து கிளைத்ததன்
முத்தமிழ் வழக்கினைத் தெளிந்தனன்!
சிந்தையிற் தெளிந்தபே ருண்மையை
இயம்புவ தென்செயல்; இதற்குமேல்
சிந்தையிற் கொள்வதும் கொளாததும்
எஞ்சிய இனமே நின்செயல்!
அன்புடன்,
இர. திருச்செல்வம், மலேசியா.
1999 – 2019

Leave a Reply