Press ESC to close

சித்திரையோ தையோ மக்கள் எதிலும் கருத்தாக இல்லை! அவர்கள் எதையும் பெரிதாகக் கருதுவதில்லை!

சித்திரையோ தையோ இவற்றைப் பெரிதாகக் கொண்டாடுதல் என்பதெல்லாம் நடைமுறையில் வடிவம் தேய்ந்துபோயுள்ள நிலையில் உள்ளன. நிகழ்காலத் தலைமுறைகளைச் சிறிதே பார்வைவியிட்டால் இவ்வுண்மை தெரியும்.

உண்மையில், கற்றோர் நடுவேதான் இவை பெரும்பேச்சுப் பொருளாக உள்ளன. இவற்றைப் பற்றிப் பேசும் அளவுக்கு இவற்றைக் கொண்டு நடைமுறையில் செயல்படுதல் என்பது இருபக்கத்திலும் குறைவிலும் குறைவு – பேச்சுதான் அதிகத்திலும் அதிகம்.

தமிழ்க் கல்வியும் தமிழ்வழிக் கல்வியும் போய்க்கொண்டுள்ள நிலைமையில் கொஞ்சம் பார்வையிட்டாலும் நடப்பு நிலையும் வருங்கால நிலையும் தெற்றெனத் தெரியும். பொதுமக்களில் பெரும்பாலோர் எதிலுமே ஒரு நிரலான பற்றோ பிடிப்போ இல்லாத அலைவான மனநிலையில் இருப்பவர்கள்.

இப்படியாகத் தாங்கள் எந்த மதத்தில் எவ்வகையான கடைப்பிடிப்பில் இருக்கிறோம் என்று தெரியாதவர்களாகவும் – அதன் கட்டமைப்பு இது என்று புரியாதவர்களாகவும் – அதிலே தங்களுக்கான நிலை அல்லது இடமதிப்பு என்பது இன்னது என்பதை தாமே உணராதவர்களாகவும் – தம் மனம்போன போக்கில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்துவருபவர்களையெல்லாம் சும்மா ஆள்கணக்கில் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பெரிய எண்ணிக்கையாக்கி ‘இந்து’ என்று ‘கணக்கு போடுதல்’ என்பதும், கணக்கு காட்டுதல்’ என்பதும் உண்மையில் ஒரு ‘தன்மிகைப்பு மாயைக் கணக்கு’ ஆகும்.

அவர்களின் ‘சார்பு’ என்பது ‘சமயம்’ என்பதைவிடச் ‘சடங்கியம்’ என்பதாகவே மிகைத்து நிற்கின்றது. ‘பண்பாடு’ என்பதைவிட ‘ஆட்டம் பாட்டம்’ – ‘கூத்துகும்மாளம்’ என்பதில்தான் வேர்பிடித்துக்கொண்டுள்ளது. ‘சமய ஆசாரம்’ சார்ந்த விழாக்களான தைபூசம், விளக்கணி (தீபாவளி) போன்றவை அனாசாரமானது எதனால்? யாரால்? எங்காவது யாராவது தடுத்து நிறுத்த முடிந்ததா?

குறிப்பு:- [தமிழர் சமய விழாக்கள் நிலவினோடு கூடிநின்ற நாள்மீன் வழியாகப் பெயர்பெற்றிருப்பவை. ஆரிய வேதிகச் சமய விழாக்கள் நிலவின் பிறை வழியாகப் பெயர் பெற்றிருப்பவை என்பதுகூட பலருக்குத் தெரியாது என்கிறார் காலஞ்சென்ற சமய வானியல் கணிய (சோதிட) அறிஞர் இ.மு.சுப்பிமணியனார் அவர்கள். தைபூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், … போன்றவை தமிழர் வழியானவை. இராம நவமி, கோகுலாட்டமி, விநாயக சதுர்த்தி, … போன்றவை ஆரிய வழியானவை. கந்த சஷ்டி, விஜயதசமி சில தமிழர் விழாக்கள் ஆரியமயம் ஆக்கப்பட்டவை. தமிழகத்துக்குள்ளே அன்னிய ஆட்சி மரபினரால் புகுத்தப்பட்டுள்ள தீபாவளி. உண்மையில் திருக்கார்த்திகை விழாவின் வடநாட்டு திரிபுநிலை வடிவம் என்று பேரா. இராம. கருப்பண்ணன் என்னும் தமிழண்ணல் அவர்கள் ஆய்ந்து கூறியுள்ளார்கள்.]

அனைத்து ஆண்டுக்கும் கணக்கு ஒன்றுதான்! கடைப்பிடிப்பு நிலையில்தான் மொழியினசமய
வேறுபாடு உள்ளது! இந்த உண்மையை உணரத் தெரியாமல் மதர்க்கிறார்கள்!
சரி, கிளப்பப்பட்ட சிக்கலுக்கு வருவோம். சித்திரைக்கும் தைக்கும் கணக்குமுறை ஒன்றுதான். இந்தியா முழுக்கவும் கணக்கு முறை ஒன்றுதான். கதிரவன், நிலா, நாள்மீன் போன்ற இயற்கை அமைப்புகள் என்பவை எந்த இனத்துக்கோ மொழிக்கோ சமயத்துக்கோ உரிமைபட்டவை அல்ல. அவை யாரிடமும் உத்தரவு கேட்டுக்கொண்டு இருப்பவையும் அல்ல – இயங்குபவையும் அல்ல.
எனவே, இந்தியா முழுதும் அவற்றின் இருப்பு நிலையினையும் இயங்கு நிலையினையும் தத்தம் தாய்மொழி மரபு அல்லது இன மரபுகளில் வந்த ஆட்சியாளர்களின் எண்ணப்படி முறைசெய்துகொண்டு காலத் தொடக்கம் காணும் இடங்கள் மட்டுமே வேறுபட்டுள்ளன. ஆனால், எல்லாவற்றிலும் அடிப்படைக் கணக்கு என்பது மேழவிழுப் (சித்திரை) புள்ளியில்தான் தொடங்குகின்றன.
இப்படித் தத்தம் தனி அடிப்படையிலும்; ஒட்டுமொத்தப் பொதுப்படையிலும் நாவலம் ஆகிய இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வெவ்வேறு மொழியினத்தவரிடையே வழங்கிவருகின்ற இந்திய ஐந்திறங்களையும் ஆண்டு முறைகளையும் ஒருங்கிசைக்கும் ஒரு முயற்சியில் பெரிதும் முயன்றுபார்த்தது ஓர் ஆய்வுப் பெருங்குழு.
அந்தக் குழு வான் இயரற்பியல் பேரறிஞர் முனைவர் மேகநாத் சகா என்னும் பெயர்கொண்ட பேரறிஞரின் தலைமையில், சாளுக்கிய (மராத்திய) மரபினத்து அரசனாகிய சாலிவாகனன் காலத்தில் உருவான சாலிவாகன சகம் அல்லது சகாப்பதம் அல்லது சகவருஷம் என்பதையே பொதுமைப்படுத்தியது.
அதன்படி 1957இல் சாலிவாகன கால மரபுதான் இந்தியாவின் காலப் பொதுமரபு என்று அப்போதைய இந்திய அரசு அறிவித்தது. அதனை இன்றளவும் இந்திய வானொலி ஆகிய ‘ஆகாஷ்வாணி’ போன்ற ஒருசில அரசுசார்ந்த நிறுவனங்கள் சொல்லிக்கொண்டுவருகின்றன. ஆனாலும், அவர்களின் ஒருங்கிசைப்புக்கு ஒத்துழைப்பும் வரவேற்பும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. ‘இந்து’ என்று சொல்லியும் சேர முடியவில்லை. அவரவரும் தத்தம் மரபுவழி நிலைபாட்டில் உறுதியாக நின்றுகொண்டனர் – நின்றுகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

@Katen on Instagram
This error message is only visible to WordPress admins

Error: No feed with the ID 1 found.

Please go to the Instagram Feed settings page to create a feed.